கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் அழிக்கப்படும் காடுகள்.

(படுவான் பாலகன்) இயற்கையின் சமநிலைக்கேற்ப மனித செயற்பாடுகளும் அமையப்பெற வேண்டும். அவ்வாறில்லாது, இயற்கையின் சமநிலையில் மாற்றம் ஏற்படுகின்ற போது, இயற்கை அனர்த்தங்களும் ஏற்படுகின்றன. இதனால் மனித சமூகம் பாரிய அழிவினை எதிர்நோக்கின்றது.


இயற்கையாகவே காடுகள் அமையப்பெற்றுள்ளன. அக்காடுகளை மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகவும், அபிவிருத்தி என்ற போர்வையிலும் அழித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தீங்குகளுக்கும் மனித சமூகம் உள்ளாகி வருகின்றது. இயற்கையாக காடுகள் அமைந்துள்ளதுபோல இலங்கைத்தீவில் ஆறுகளும் அமையப்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் அம்சமாக ஆறுகள்(வாவிகள்) அமைந்துள்ளமை சிறப்புக்குரியது. இவ்வாற்றை அண்டிய களப்பு பகுதிகளில் பல்வேறு இன மரங்கள், பற்றைகள் உள்ளன. இக்காடுகள் பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பினராலும் அழிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன. இன்றும் ஆங்காங்கு இவ்வாறான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை கவலைக்குரியதே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்,  கொக்கட்டிச்சோலை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள ஆற்றாங்கரையை அண்டிய களப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடுகளை, இனந்தெரியாதோர் அண்மைக்காலங்களாக அழித்து வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள பற்றைகள் காடுகள் வெட்டப்பட்டு, தேவையான கம்புகள், மரங்கள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு வெட்டப்பட்ட மரங்களில் இருந்த கிளைகள் நீண்ட நாட்களாக அவ்விடத்திலே இருந்து விறகுகளாக மாற்றமடைந்திருக்கின்றன. அவ்வாறான விறகுகளை இப்பிரதேசத்தில் உள்ள மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். பெண்கள் பலர் தலையில் சுமந்தும், துவிச்சக்கரவண்டியிலும், ஏனைய வாகனங்களிலும் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். இது தொடர்பில் குறித்த பகுதியின் பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உரிய இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்த போது, பெருமளவிலானவர்கள் விறகெடுத்து சென்றிருக்கின்றனர்.
இதன்போது உரிய இடத்திற்கு காவல்துறையினரையும் அழைத்து, குறித்த நபர்களை எச்சரித்து அனுப்பியிருந்த சம்பமும் அண்மையில் பதிவாகியிருக்கின்றது.
வாவிகளை அண்டிய களப்புக்களில் உள்ள மரங்கள், பற்றைகாடுகளினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. குறிப்பாக, இங்குள்ள சில இனமரங்களின் இளந்தளிர்கள் கறி சமைக்க, விநாகிரி தயாரிக்க, விறகுக்கு, பூச்சி புழு அரிப்பிலிருந்து பாதுகாக்க, படகுகள் கட்டடம், மீன்பிடி உபகரணங்களை செய்ய, விவசாயத்திற்கு பசளையாகப் பயன்படுத்த, இறால் வளர்ப்புக்கு, கால்நடைகளின் தீவனமாக, எலும்பு முறிவு, காயங்கள், தோல்நோய் போன்றவற்றிற்கு மருந்தாக, மீனுக்கு உணவாக, மீன் இனப்பெருக்கத்திற்கான இடமாக,  மண்ணரிப்பை தடைசெய்வதற்கும் இவ்வாறான காடுகள் பெரிதும் உதவுகின்றன. அதேவேளை, வாவிகளில் மாசுபடலை குறைப்பதற்கும்,  பறவை, விலங்குகள் தங்கும் இடமாகவும் அமைந்துள்ளன. இவ்வாறான காடுகளை அழிப்பதனை நிறுத்துவதன் மூலமாக மேலுள்ள பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.