அன்னமலை வைத்தியசாலையில் மருத்துவர் விடுதி திறப்பு

(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதியொன்று இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் அனுர பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் அதிதியாகக் கலந்து இதனைத் திறந்து வைத்தார்

இவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாக புனரமைப்பின்றி கைவிடப்பட்டிருந்த பழைய விடுதிக் கட்டடம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக புனரமைப்பு செய்யப்பட்டே இவ்விடுதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் விடுதிக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தூர இடங்களில் இருந்து வருகின்ற வைத்தியர்கள் தங்குவதற்கென இவ்வைத்தியசாலையில் விடுதியொன்று இல்லாததன் காரணமாக இங்கு நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள், குறுகிய காலத்தினுள் இடமாற்றம் பெற்றுச் செல்வதால், வைத்தியசாலை சீராக இயங்க முடியாத நிலைமை இருந்து வந்தது. இதனை வைத்தியசாலை அபிவிருத்தி சபை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தங்க வடிவேல், வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் தலைவர் சி.கணபதிப்பிள்ளை உட்பட நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.