கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரை முழந்தாளிட்டு இருக்கச் செய்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை தனது கைத் துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியமையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவரை உடன் கைது செய்ய வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரவது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் இந்த செயற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கொலை செய்யும் நோக்கத்துடனும் இனவாத சிந்தனையுடனும் செயல்படும் லொஹான் ரத்வத்தை போன்றவர்கள் அரசியல் தலைமைத்துவத்திற்கு பொருத்தம் இல்லாதவர்கள்.

அதுவும் தமது வாழ்வை தொலைத்து அப்பாவிகளாக நீண்ட வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளிடம்  பொறுப்பு வாய்ந்த இராஜாங்க அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த செயற்பாடு தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறையில் எதுவித பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு ஆயுதங்களுடன் செல்லலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதனை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே ஜனநாயகத்தை கட்டி காப்பதாக கூறிக்கொள்ளும் இன்றைய அரசாங்கமானது சிறைச்சாலைக்குள் துப்பாக்கியோடு சென்றமைக்காகவும்  அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காரணத்திற்காகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்