கொரோனா தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துப் பொதி அறிமுகம்

கொரோனா தொற்றுநோயை  ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின் பணிப்புப்படி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அங்கு கருத்தில் தெரிவித்ததாவது,

நாங்கள் அறிமுகம் செய்துள்ள ஆயுர்வேத மருந்துப் பொதியில் ஐந்து நபர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான ஆயுர்வேத மருந்துகள் அடங்கியிருக்கும்.

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் விலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்ளவேண்டும். அத்தோடு சுகாதார பழக்கவழக்கங்களை அனைவரும் பின்பற்றவேண்டும். தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

அடிக்கடி தோடம்பழம், தேசிக்காய் போன்ற பானங்களை நாம் அருந்துவதும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வதும் நன்மைபயக்கும். 8 தொடக்கம் 10 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அரிசிக்கஞ்சி போன்றவற்றை அடிக்கடி அருந்துவதோடு மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது.

1 மணித்தியாலம் சூரிய ஒளியில்  இருத்தல் வேண்டும். நாம் வசிக்கின்ற இடங்களை நன்கு காற்றோட்டம் உள்ள இடமாக மாற்றி கொள்வது அவசியமாகும். இவற்றை செய்வதன் ஊடாக எம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தோற்றுவிக்கப்படும். இதனால், தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொண்டு பக்கபலமாக நமது ஆயுள்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.