கொரோனா தொற்றுக்குள்ளான கைவிடப்பட்ட குழந்தைக்கு தாதியர்கள் ஒன்றிணைந்து காது குத்தும் விழா

பிறந்து ஆறு  நாட்களில் கை விடப்பட்டதும் கொரோனா தொற்றுக்குள்ளானதுமான குழந்தை ஒன்றுக்கு வைத்தியசாலை தாதியர்கள் காதுகுத்து விழாவை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டுவந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கந்தளாய் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும்போதே இவ்விழா நடாத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டுவந்த குழந்தை ஒன்றுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அக்குழந்தைக்கு கடந்த ஒன்பது நாட்களாக கந்தளாய் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை அழிக்கப்பட்டுவருகிறது.

தற்போது அக்குழந்தைக்கு வயது பதினோரு மாதமாகியநிலையில், குழந்தையில் அக்கறை கொண்ட கந்தளாய் கொரோனா வைத்தியசாலை ஏழாம் வாட்டுக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

தாதிய உத்தியோகத்தர்களின் இச்செயற்பாட்டை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஏனைய நோயாளர்களும் பார்த்து மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.