ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாத வகையில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மீராவோடை தொடக்கம் தியாவட்டவான் பகுதிவரை ஆற்றின் ஓரங்களில் ஏராளமான கழிவுகள் வீசப்படுவதால் தொழிலுக்கு செல்லும் ஓட்டமாவடி மீனவர்கள் பாரிய இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது.
இதனால், அண்மைக்காலமாக தமது ஜீவனோபாய தொழிலை செய்யமுடியாதுள்ளதாகவும் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
மீராவோடை தொடக்கம் தியாவட்டவான் பகுதி வரைக்கும் ஆற்றங்கரை ஓரத்தில் வீட்டு கழிவுகள், குழந்தைகளின் மலசல கழிவுகள் கொட்டப்படுகிறது. அத்தோடு இறைச்சி வியாபாரிகள் சிலர் தங்களுடைய இறைச்சி கழிவுகளையும் மூடைகளில் கட்டி ஆற்றங்கரையில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இதன்காரணமாக, கழிவுகள் ஆற்றில் சேர்ந்து அவை மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்வதுடன், இதனை மீன்கள் உணவாக உண்ணும்போது மீனினமும் அழிவடைகிறது.
அதுமட்டுமல்லாது, ஆற்றங்கரை குடியிருப்பாளர்கள் சிலர் தங்களது வீட்டு கழிவுநீர் குழாயை ஆற்றில் விடுகின்றனர். இதனால் கழிவு நீரும் ஆற்றில் சேர்வதால் மீன் இனப்பெருக்கம் குறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபை, பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோருக்கு தெரியப்படுத்தியும் யாரும் இதுபற்றி கரிசனை கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மீன்பிடித் திணைக்கள பரிசோதகரிடம் முறைபாடு செய்துள்ளதாவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் மீனவர்கள் தொழில் செய்முடியாது தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து நிர்க்கதியாகும் நிலைமை உருவாகும்.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.