பழிவாங்கும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய பெண் கைது

திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெயிலரை பழிவாங்கும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை நபர் ஒருவருக்கு வழங்கிய  பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை மட்கோ மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.எச். இனோகா நில்மினி (43வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த ஜீலை மாதம் 19ஆம் திகதி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த திருகோணமலை சிறைச்சாலை ஜெயிலர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜெயிலருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தநிலையில், ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை வைத்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே, பிரதான சந்தேக நபராக இருந்த குறித்த பெண் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்ணின் மகன் (மலிந்த பின்சர) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.