கந்தளாயில் அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

திருகோணமலை கொழும்பு பிரதான வீதியின் கந்தளாய் பகுதியில் அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டியதையடுத்து அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் பேராற்றுவெளி பகுதியிலுள்ள அறுவடைசெய்த வயல் நிலங்களுக்கே இனந்தெரியாதோரால்  இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால்,  அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் பயணம் செய்வோரும் இதனால் சிரமங்களை எதிர்நோக்கினர்.

மேலும், இப்பகுதியூடாக வாகனத்தில் செல்லுவோரும்  ஒளிச் சமிக்கைகளை இட்டு செல்கின்றனர்.

தீயின் காரணமாக ஏற்பட்ட பெரும்புகை மற்றும் தூசுகளால் அப்பகுதி வீடுகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

தீயினை அணைப்பதற்கு உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.