தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே சிதைத்து விட்டனர்

 தலைவர் வி.எஸ்.சிவகரன்
 (வாஸ் கூஞ்ஞ)
தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே  தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு  சிதைத்து சின்னாபின்னமாகி விட்டனர்.ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மாற்றம் வேண்டும் இல்லையேல்  தமிழ்மக்கள் வேறு வழி நாடவேண்டும் எனதமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ்.சிவகரன்  தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது
யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு  ஆண்டுகள் கடந்து விட்ட போதும் தலைமமற்ற  வெறுமைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் தமிழ் மக்கள்    தேர்தல் திருவிழா வணிகத்தை மூலதனமாக்கி ஆதாயச்சூதாடிகளாக அடுக்கு மொழியில் மிடுக்கு வார்த்தையை உணர்ச்சி பொங்க உருவேற்றி உணர்வைத் தூண்டி பதவி சுக போகத்தில் மிதக்கிறார்கள் இவர்களிடம் தமிழ்த்தேசிய அற அரசியலை எதிர்பார்க்க முடியுமா ?
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐக்கியத்தோடு ஒருமித்து நீதி கோர முடியாதவர்களிடம் காணாமல் போன 146,679 பேரை  இவர்களால் கண்டுபிடிக்க  வழிவகுக்க முடியுமா ?
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக எந்த விதமான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை கோசங்களுக்கு அப்பால் இலட்சியமும் இல்லை இலக்கும் இல்லை அணிகளாக பிரிந்து பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களை நட்டாற்றில்  தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள்
கடந்த சனவரி மாதம் தமிழ்க்கட்சிகளை ஒரு நிரலுக்குட்படுத்த நாம் பட்ட வலிகள் எண்ணற்றவை
தமிழ் அரசியல் வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற் கொள்வதாக எமக்கு தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உளமார புரிந்து கொண்டு அவர்கள்  துயர் துடைக்க எந்த அரசியல் வாதியும் இதுவரை முனையவில்லை.
தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே  தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு  சிதைத்து சின்னாபின்னமாகி விட்டனர்.
பாவம் தமிழ்மக்கள் புலிகளின் மெளனிப்பிற்குப் பின்னர் தேர்தல் வணிகர்களால்  கூறு போட்டு விற்கப்படுகிறார்கள் அவர்களது வலிகளை இந்த எலிகள் எள்ளிநகையாடுகின்றன.
புலம்பெயர்ந்த சில அமைப்புகளும் சில பன்னாட்டு தூதரகங்களும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள்  ஆழம் பார்த்து ஆட்டுவிக்கின்றன .
தமிழ்மக்கள் சிந்திக்காமல் இதே நிலையில் தொடர்வார்களாயின் இன்னும் ஒரு தசாப்தத்தில் முழுமையான அடையாளத்தை நாம் இழந்து விடுவோம்  குறுகிய மனோநிலையில் கட்சி பேதங்களும் குழு மோதல்களும் காட்டிக் கொடுப்புக்களும் கூடவே இருந்து குழி பறிப்புக்களுமே இன்றைய தமிழ் அரசியலின் வகிபாகம் சந்தி சிரிக்கிறது இவர்களின் வெறுமை அரசியலை .
போலிக் கூட்டுக்களும் பொய்மை வாதங்களும் நீலிக் கண்ணீரும் தமிழ்மக்களின் இருப்பை மேலும் மேலும் கேள்விக்குட்படுத்துகிறது என்பதை இவர்கள் புரியாததது வேதனையே
ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மாற்றம் வேண்டும் இல்லையேல்  தமிழ்மக்கள் வேறு வழி நாடவேண்டும்.
இரண்டுமில்லையேல்  தமிழினத்தை ஆராட்சியிலே தான் தேடவேண்டியிருக்கும். என்பதே மறுக்க முடியாத உண்மை.