திட்டமிட்ட வரலாற்று குற்றங்களும் முஸ்லீம்களும்

நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வந்த போதிலும் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
 இலங்கை வரலாற்றில் திட்டமிட்ட அடிப்படையில் பெரும்பான்மையை சேர்ந்த சில குழுக்களாலும் தமிழ் ஈழ விடுதலை  புலிகளாலும் முஸ்லிம் சமூகமும் பல் வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அந்த அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், வியாபாரங்கள், உயிர்கள் என பல்வேறு இழப்புக்கள் ஏற்படுத்தப் பட்ட போதிலும் அவற்றுக்கு எந்த ஒரு நீதியும் இதுவரை கிடைக்கவில்லை என்பது மிக கவலையான விடயமாகும்.
அந்த அடிப்படையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற இழப்புகளுக்கான நீதியை சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசானது தமிழ் மக்கள் மீது இன அழிப்பு, இன சுத்திகரிப்பு, திட்டமிட்டு காணாமல் ஆக்குதல் போன்ற பாரிய உரிமை மீறல்களை செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகளை  முன்வைத்தே தமக்கான நீதியினை கேட்டு அம் மக்களின் தலைமைகள் சர்வதேசத்திடம் தொடராக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளினால் வடக்கிலிருந்து வலுகட்டாயமாக  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் பணம், ஆபரணங்கள் அனைத்துமே சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான உயிர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் கொடூரமான முறையில் அழிக்கப்பட்டன.
அதேபோன்று சில பௌத்த தீவிரவாத குழுக்களினால் எந்தவொரு நியாயமான காரணங்களும் இன்றி முஸ்லிம்களின் பொருளாதாரம், சொத்துக்கள், உயிர்கள், வணக்கஸ்தளங்கள் என பல்லாயிரம் கோடிகள் அழிக்கப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தினாலும் இராணுவத்தினராலும் தமிழ் மக்களுக்கு‌ எதிராக நடாத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களை முறையாக சர்வதேசத்திடம் தெளிவு படுத்துவதன் மூலமே உரிய நீதியை பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற யதார்த்தம் தற்போது வெளிப்படையாக தெரிகின்றது.
ஆனால் இங்கே இராணுவத்தினராலும் இலங்கை அரசினாலும் அரங்கேற்ற பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு எத்தனிக்கின்ற சில தமிழ் தலைமைகள் அதே தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக அரங்கேற்றப் பட்ட அதே குற்றச்சாட்டுக்களை ஏற்பதற்கு தயார் இல்லை.
அப்படியான உண்மைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பால சிங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற போது, சிரேஷ்ட சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் போன்றவர்கள் முறையாக வெளிப்படுத்துகின்ற போது சில அரசியல் ஞானம் இல்லாதவர்கள் அவற்றை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக தடுமாறுகிறார்கள்.
அதே நேரம் அண்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமூகம் மீடியாவின் “நிலவரம்” எனும் அரசியல் ஆய்வுக்கள நேர்காணலில் பங்குகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான திருவாளர் காண்டீபன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக  அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான இன அழிப்பு, இன சுத்திகரிப்பு  செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு அதனை நியாயப்படுத்துவதற்காக முயற்சித்ததையும் எண்ணி நாங்கள்வெட்கப் படுகிறோம்.
இணைந்த வடகிழக்கு மாகாண முறைமையை எதிர்பார்க்கின்ற தமிழ் தலைமைகள் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இஸ்லாமிய தமிழர்கள் என்று வரைவிலக்கணப்படுத்த முயற்சிப்பதும் , விடுதலைப்புலிகளினால் அரங்கேற்றப்பட்டதான அந்த கொடூர செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் உண்மைகளை புதைப்பதும் எந்த விதத்தில் நியாயமாக அமைய முடியும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்ற போது முஸ்லிம் சமூகம் எந்த நியாயத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்தாசை புரிய வேண்டும் என எதிர்பார்க்க முடியும்.
எனவே யார் செய்தாலும் குற்றம் குற்றமே. அப்பாவியான முஸ்லிம் சமூகம் கடும்போக்கான பெரும்பான்மை சமூக குழுக்களாலும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளினாலும் நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி அநியாயமாக தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை எப்போதும் யாராலும் மறுக்க முடியாது.
முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என கூறி வாக்குகளை பெறுகின்ற அரசியல் கட்சிகளும் தலைமைகளும் இவ்விடயங்களுக்கு உரிய தீர்வையும் நட்ட ஈடுகளையும் பெற்றுக் கொடுக்க தவறி இருக்கிறார்கள்.இந்தத் தலைமைகள் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட இச்சமூகம் தம் தலைமைகளுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
நிச்சயமாக உயிர்கள் சொத்துக்கள் பொருளாதாரம் என பல வழிகளிலும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட  முஸ்லிம் சமூகத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசும், தமிழ், முஸ்லீம் தலைமைகளும் முன்னின்று தொழிற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.