மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது-இம்ரான் mp

(பைஷல் இஸ்மாயில் ) மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரசின் நண்பர்களாலேயே சீனி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களே சீனியை இலங்கைக்கு கொண்டுவந்தனர். அரிசி விலையை தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்கமுடியும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதெல்லாம் அப்பாவி சில்லறை வியாபாரிகளுக்கே ஆகும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை என இதில் இருந்தே தெளிவாகிறது குற்றவாளிகளை அருகில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அடக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தால் பொதுமக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள் என்ற பயத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே நாம் இச்சட்டத்தை நீக்கி அனர்த்த நிவாரண சட்டத்தின் மூலம் பெருந்தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறோம் என தெரிவித்தார்.