பொருட்களைப் பதுக்கி ஏழை மக்களை வருத்தாதீர்கள். (மு பா. உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.)

( துறையூர் சஞ்சயன் )கொரோனா மரணம் ஒரு புறம் இருக்க பசியால் பட்டினியால் போசாக்கு இன்மையால் மரணிக்கும் நிலையும் வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காகப் பொருட்கள் பதுக்கப்பட்டு வருவது மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரத் தாக்கத்தினால் தொற்றாளர்கள் மரணங்கள் அதிகரிப்பு என்று மக்களின் அவலம் அதிகரித்தே காணப்படுகிறது. தினக்கூலி மூலமாக பிழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை நாடு முடக்கப்பட்டு அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், விலைவாசிகள் விசம் போல் ஏறுவதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

பொருளாதாரக் கொள்ளை இலாபமா ? மனிதாபிமான நியாயமா ? என்ற தேர்வில் மனிதாபிமான நியாயத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அந்த முன்னுரிமையை புறந்தள்ளி விட்டு பொருளாதார இலாபத்திற்கு முன்னுரிமை கொடுப்பதென்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த வேளையில் மனித நேய அடிப்படையில் நியாய விலைகளில் பொருட்களை விற்பனை செய்கின்ற ஏழைகளுக்கு உதவுகின்ற வர்த்தகர்களை பாராட்டுகிறோம். மாறாக எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற அடிப்படையில் பொருட்களைப் பதுக்கி கொள்ளை இலாபம் ஈட்ட விரும்பும் வர்த்தகர்களை மக்கள் சார்பாக கண்டிக்கிறோம்.

தயவு செய்து மக்களின் வறுமையோடும் உயிரோடும் விளையாட வேண்டாம் என்று மனிதாபிமான அடிப்படையில் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். பொறுப்புள்ள அரசாங்கமென்ற வகையில் நியாய விலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை இலகுபடுத்த வேண்டும். சதொச மொத்த விற்பனை நிலையங்களில் நியாய விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்யலாமென்று அரசு கூறுகிறது. ஏற்கனவே பல சதொச நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் கொக்கடிச்சோலை, கருவாஞ்சிக்குடி போன்ற இடங்களிலுள்ள சதொச நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டமாவடியில் இயங்கும் சதொச நிலையத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அதுவும் ஒரு கிலோ கிராம் சீனிக்காகவும், வேறு சில பொருட்களுக்காகவும் மக்கள் அவ்வளவு தூரம் பயணிக்க முடியுமா ? சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்கின்ற நிலையில் மக்கள் திண்டாடுகின்றனர்.

சிறு விவசாயிகள் தமது தேவைக்காகச் சேமிக்கப்பட்ட தானியங்களை முதன்மைப்படுத்தாமல், பாரியளவில் பதுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது நுகர்வோர் அதிகாரசபை கவனம் செலுத்தி அவற்றை மக்களின் தேவைக்காக வெளிக்கொணர வேண்டும். அதே வேளை அரசின் நிவாரணங்கள் பெயரளவில் கொடுக்கப்படாமல்இ நியாயமாக கொடுக்கப்பட வேண்டும்.

இன்று நாடு 10 நாட்களுக்கு மேல் முடக்கப்பட்ட நிலையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மாத்திரம் வழங்கப்படுவதென்பது வெறும் கண்துடைப்பாகவே அமையும். ஒரு நாளைக்கு ரூபாய் ஆயிரம் என்ற அடிப்படையில் முடக்கப்படும் நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிவாரணத் தொகை அமைய வேண்டும். இதனையும் அரசு கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.