அக்கரைப்பற்று சதோச நிறுவனத்தில் சீனி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு அடுத்து சில மணிநேரத்தில் மீண்டும் விநியோகம் இடம்பெற்றது.

(வி.சுகிர்தகுமார்) அரசாங்கம் மக்களுக்கு தேவையான சீனியினை சதோச மூலமாக கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டபோதும் அக்கரைப்பற்று சதோச நிறுவனத்தில் இன்று காலை 10 மணிளவில் சீனி முடிவடைந்துள்ளதாக சதோச பாதுகாப்பு உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து சிலர் விசனமடைந்த நிலையில் வெளியேறினர். ஆயினும் சில மணிநேரத்தில் மீண்டும் சீனி மூடைகள் எடுத்துவரப்பட்டு விநியோகம் இடம்பெற்றதாக அறிய கிடைத்தது.
இதேநரம் நீண்ட நேரம் வெயிலின் மத்தியில் நின்ற மக்கள் விரக்தி அடைந்த நிலையில் தங்களை சதோச அருகில் உள்ள வாகன தரிப்பிட கட்டடத்தின் கீழவாது நிறுத்தி வைக்காமல் வீதியின் ஓரத்தில் காத்திருக்க வைப்பதாகவும் கவலை வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் குறித்த சதோச நிறுவனத்தின் ஊடாக ஒருவருக்கு 3 கிலோ கிராம் சீனி கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்பட்டது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சதோச நிறுவனத்தில் சீனி திடீரென இல்லாமல் போனமைக்கு காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை 10 மணிக்கு பிற்பாடே இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் முன் கூட்டியே சீனி இல்லை என தெரிவித்திருந்தால் தாம் வெளியேறி இருப்போம் எனவும் கூறினர்.

இதேநேரம் சில தனியார் விற்பனை நிலையங்களில் இன்று சீனி கட்டுப்பாட்டு விலையினை மீறி விற்பனை செய்யப்பட்ட நிலையில் சில வியாபார நிலையங்களில் 130 விற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.