நிந்தவூர் பிரதேசத்தில் பொது மக்களுக்கும் சுகாதாரத்துறையினருக்குமிடையில் முறுகல் நிலை

ஏ.பி.எம்.அஸ்ஹர்
நிந்தவூர் பிரதேசத்தில்   அங்கர் பால்மாவை கொள்வனவு செய்வதற்காக  வரிசையில் காத்திருந்த பொது மக்களுக்கு  அன்ரிஜன் பரிசோதனை செய்யமுற்பட்டபோது பொது மக்களுக்கும் சுகாதாரத்துறையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் இன்று நண்பகலளவில் இடம் பெற்றது

நிந்தவூர் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அங்கர் மொத்த விற்பனை நிலையமொன்றில் அங்கர் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்த பொதுமக்கள்  அங்கு சென்று பால் மாவினை கொள்வனவு செய்ய எத்தணித்திருந்தனர். தற்போது நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலையினை  மறந்து மக்கள் வரிசையில் நின்று இப்பால்மாவினை கொள்வனவு செய்வதற்காக காத்திருந்தனர்.
இத்தகவலை அறிந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து , மக்களை அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுமாறு பணித்த போதும், தாங்கள் எப்படியாவது அங்கர் பால்மாவினை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நிலையில் காணப்பட்டனர்.
இது விடயம் பற்றி நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது உடன் நடவடிக்கை எடுத்த வைத்திய அதிகாரி, பொது மக்கள் குழுமி நிற்கும் இடத்துக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களை அனுப்பியதுடன், வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்ய முற்பட்டபோது அங்கிருந்து பொது மக்களுக்கும்
சுகாதாரத்துறையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
பின்னர் பொது மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்
இருந்தபோதும், மக்களின் நன்மை கருதி தாங்கள் இதனை விநியோகிக்க இருந்ததாகவும் அதற்கிடையில் மக்கள் அவசரப்பட்டுவிட்டனர் என்றும், தாங்கள் இதனை ஒவ்வொரு கடைகளிலும் விநியோகிக்கவுள்ளதாக இந்த மொத்த விற்பனை நிலையத்தின் வியாபார முகாமையாளர் தெரிவித்தார்.