2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைப்பு!

(மட்டக்களப்பு விசேட நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 2000 ரூபா உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்று (25) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ளவர்களுக்கான
2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடுகள் வீடுவீடாக சென்று
வழங்கும் பணிகள் இன்று திராய்மடு பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், சமூர்த்தி திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 64,382 குடும்பங்கள் 2000 ரூபா பெறுவதற்கான
தகுதியைப்பெற்றுள்ளதாகவும் இதற்காக அரசாங்கத்தினால் 39 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்தார்.