இராணுவத்தின் வைத்திய பிரிவும் களம் இறக்கப்பட்டது சிறந்த திட்டமிடலாகும். பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார்

(வவுணதீவு நிருபர்) எமது நாட்டில் ஜனாதிபதியின் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை குறைத்து மதிப்பிட முடியாது. நாடு முடக்கப்பட்ட போதிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளும் மிக சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றன. என பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், பிரதேசங்களின் அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

செவ்வாய்கிழமை (24) அன்றுஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வடக்கு, கிழக்கில் தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது தடுப்பூசி ஏற்றும் பணியை விரைவாக முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தின் வைத்திய பிரிவும் களம் இறங்கியுள்ளது. இது சிறந்த திட்டமிடலாகும்.

இராணுவத்தின் வைத்தியர்கள், சுகாதாரப் பிரிவினர் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கிவருகின்றனர்.

இந்த அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்டாலும், அரசு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளையும் வேலைவாய்ப்புக்களையும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி இடம்பெற்று வருகின்றது.

நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது போல் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது. கொவிட் ஒழிக்கப்பட்டு, நாடு ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்ததும் நிச்சயம் எமது வாக்குறுதிகள் முழுமை பெறும். எனவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். என தெரிவித்தார்.