(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் அவசர திருத்த வேலைகளுக்காக 56 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 56 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இப்பாடசாலைகளுக்குரிய தரமுயர்த்தல் கடிதங்களை கல்வி அமைச்சு எமக்கு அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதங்கள் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வருகின்றன.
இப்பாடசாலைகளின் அவசர திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட 56 மில்லியன் ரூபா நிதி ஊடாக ஒவ்வொரு பாடசாலையும் தலா ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படும்- என அவர் மேலும் குறிப்பிட்டார்.