பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினரால் 3000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை – 01 கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் சுமார் 3000 போதை மாத்திரைகளுடன் பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினரால் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,  அம்பாரை மாவட்ட பிரவுக்கு பொறுப்பான விஷேட அதிரடிப்படையினரின் சிரேஸ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கொமாண்டர் ஜே. ஆர். சேனடீரா, மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியத்துக்கு பொறுப்பான கொமாண்டர் டீ..சி. விவிதவிதான ஆகியோரது ஆலோசனைக்கு அமைய பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாளர் ஆர்.ஏ.டீ.சி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான எச்.பி.ஜி. கே. நிசங்க, ஜி.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சாஜன் குணபால(19401), மற்றும் குமார (6685), விஜயதுங்க (81312), நிமேஸ் (90699),பியுமக்க(94143), ரங்கநாத் (94220) சந்திரசிறி (53795) உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் விரைந்து சூட்சுமமான முறையில் சுற்றிவளைத்தனர்.

இதன் போது சந்தேகத்திற்கிடமான சொறிக்கல்முனை பகுதியில் வைத்து குறித்த நபர் போதை மாத்திரைகளை ஸ்கூட்டர் மோட்டார் வண்டிக்குள் எடுத்துச் செல்வதற்கு முற்பட்ட போது, மாறுவேடம் தரித்து போதை மாத்திரைகளை வாங்குபவர்கள் போன்று குறித்த நபரை அணுகிய விசேட அதிரடிப்படையினர்  போதை மாத்திரைகளுடன் குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கில் போன்றவற்றை  விசேட அதிரடிப்படையினர் கல்முனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பிரபல வைத்தியசாலை ஒன்றில் சமையலறை பகுதியில் பணியாற்றுபவர் என்பதும் இந்த போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபாய் இருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் தற்போது  முன்னெடுத்து வருகின்றனர்.