அலி ஸாஹிர் மௌலானா அவர்களது முயற்சியில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கொவிட் விடுதி

ந.குகதர்சன்

கொரோனா தொற்று இலங்கையில் ஏற்பட்டு நாடும் மக்களும்  பல்வேறு சவால்களை எதிர்கொண்ட தருணங்களில் அரசியலுக்கு அப்பாலான அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பங்களிப்பானது மிகவும் பெறுமதியானது..

ஜனாசா எரிப்பிற்கு எதிரான போராட்டம், முதலாவது  அலையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களிலும் முடக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது, வைத்தியசாலைக்கான இலவச போக்குவரத்து சேவை, ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான , நிர்க்கதியாக மேல் மாகாணத்தில் முடங்கிய கிழக்கை சேர்ந்தவர்களுக்கான உணவு பொதி விநியோகம், ஜனாசா எரிப்புக்கு எதிரான ஊடக விழிப்புணர்வினை உலகம் பூராக எதிரொலிக்க செய்தமை, என பலவாறாக தொடர்ந்து இறுதியாக ஏறாவூர் பிரதேச மக்களது நலன்கருதி ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை நிலையம் ஒன்றினை அமைப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தி தனது முயற்சியின் ஊடாக நிதியினை ஒழுங்கமைத்து 20 கொவிட் நோயாளிகளுக்கு முழு வசதிகளை கொண்டதான சிகிச்சை நிலையம் ஒன்றினை அமைத்து கொடுத்ததுடன் , அவசர சிகிச்சை பிரிவினை தற்காலிகமாக வைத்தியசாலையின்  பிரிதொரு இடத்தில் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் வழங்கி உள்ளார்..

எவ்வித அரசியல் அதிகாரங்களும் அற்ற நிலையில் மக்களுக்கான அவசியமான பணி குறித்தும் சமூக நலன் குறித்தும் முனைப்புடன் செயலாற்றியமைக்காக பலரும் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை பாராட்டி வருகின்னறனர்.

இந்நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஒழுங்கமைப்புடன் அமைக்கப்பட்ட கொவிட் விடுதி மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தயாளினி சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதில் ஏறாவூர் நகர முதல்வர் நழீம் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா. மயூரன், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான சுபையிர் ஹாஜி , ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான ரியாழ் (லூலூ),  மற்றும் ஜப்பார் , சமூக ஆர்வலர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடுதியில் நாளை முதல் கொவிட்  நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட உள்ளதுடன் முதற் கட்டமாக பெண்களை அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் மிகவும் அவசியமானதும் பிரதேசத்தின் தேவையறிந்து ஒரு ஒழுங்கமைப்பினை முன்னெடுத்தமைக்காக அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு பலரும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும்  தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது