பொத்துவிலில் அறுகம்பை சுற்றுலா பொலிஸார் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால் பல திணைக்களங்களுக்கும் பூட்டு.
 
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அம்பாறை மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யூ.அப்துல் சமது அவர்களின் வழிகாட்டலில் பொதுச்சுகாதார சிரேஸ்ட மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர்  தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகளை பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

பொத்துவில் அறுகம்பை சுற்றுலா பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது, சுற்றுலா துறைக்கு பொறுப்பாக செயல்பட்டு வருகின்ற 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளின் போது
பொத்துவில் விவசாய விஸ்தரிப்பு காரியாலயத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த காரியாலயம் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடப்பட்டுள்ளது. கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அலுவலகமும் தற்போது மூடப்பட்டுள்ளது. செலான் வங்கியின் நபர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து வங்கி நடவடிக்கைகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பொத்துவில் மீன்பிடி யாளர்கள் 100 பேருக்கு (15) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறுகம்பை சிங்கபுர பிரதேசத்தில் 93 நபர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 07 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.