நூருல் ஹுதா உமர்
ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவுக்கான உரிமைகள் எனும் அம்சம் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத்துறைக்குள் சேதனப் பசளை பாவனையை கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனடிப்படையில், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பசுமையான சமூக பொருளாதார கருத்திட்டத்திற்கமைவாக சேதன உரமாக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் தலைமையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சேதனப் பசளை உற்பத்தியாளர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு அவசியமான தொழில் நுட்ப உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளூரிலேயே சேதன உர உற்பத்தியை அதிகரித்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் , அக்கரைப்பற்று கமநல சேவை மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.ஹமீத், ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ. ஜீ.எம். பிர்னாஸ், கமநல சேவை உத்தியோகத்தர்கள், கிராம நிர்வாக சேவை அதிகாரிகள், கமநல போதனா ஆசிரியர்கள், விவசாய தொழில் நுட்பவியலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.