ஊடகவியலாளர்கள் சமூகத்தின் கௌரவத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்

– உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவிப்பு

 
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சமூகத்தின் கௌரவத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சிரேஸ்ட சட்டத்தரணி சட்ட முதுமானி எம்.ஏ.சி.எம். உவைஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடலும் ரீ-சேட் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிராந்திய அலுவலகம் முன்பாக உள்ள
TFC   ஹோட்டலில் (07) போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் சமூகத்தின் பெறுமதியான சொத்தாகும். இவர்கள் பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கும் உன்னதமான பணியினை  மேற்கொண்டு வருகின்றனர். ஊடகவியலாளர்களின் பணி சமூகத்தில் முக்கியமானதாகும். சமகாலத்தில் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்று எழுதுகின்ற ஒரு சிலர் காணப்படுகின்ற நேரத்தில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் பொதுமக்களின் அபிப்பிராயத்தையும் வெளியிலே கொண்டு வருகின்ற பாரிய பொறுப்பை ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களை கௌரவத்துடனும் மரியாதையுடனும் நோக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதே நேரம் ஊடகவியலாளர்கள் நமது கடமை மற்றும் தேவை நோக்கம் கருதி நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் இன்றைய சமூக, சமய, பொருளாதார, சுற்றாடல் துறைகளில் என்னைப் பொறுத்த அளவில் ஊடகவியலாளர்களுக்கு இடைவெளி காணப்படுகின்றது. இவற்றை சமூகத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டங்கள், கட்டாயக் கல்வியின் அவசியம், சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களில் ஊடகவியலாளர்களுக்கு இடைவெளி காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இவை சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனை எதிர் காலங்களில் ஊடகவியலாளர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சமூகத்தில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள் போன்று ஊடகவியலாளர்களும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து இருக்கின்ற ஒரு சபையில் எனக்கும் பேச கிடைத்தமையை நான் பெரும் பேறாக கருதுகின்றேன் என்று தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வில் ASRM நிறுவனத்தின் உரிமையாளர் எம். எம்.முசாதிக் ஹாஜியார், போரத்தின் செயலாளர்  எம்.எஸ்.எம்.ஹனீபா, தவிசாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் எஸ்.எம். அப்துல் மலீக், பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.நிப்றாஸ், உபதலைவர் வீ.சுகிர்தகுமார் உட்பட போரத்தின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

smart