பிள்ளையான் தடுக்கின்றார் பாராளுமன்றத்தில் சாணக்கியன்.

அரசாங்கம் நாட்டுக்கான முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக ஒரே தொலைபேசி அழைப்பில் நூறாயிரம் கனேடிய டொலர் முதலீட்டை நாளையே பெற்றுக்கொடுக்க முடியும். ஒரு தொலைபேசி அழைப்பில் அதனை என்னால் செய்து காட்ட முடியும். இவ்வாறு எம்மால் பல முதலீட்டாளர்களை கொண்டுவர முடியும். ஆனால் அதனை செய்ய விடாது பிள்ளையான் தடுக்கின்றார். அவர் இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  நேற்று பாராளுமன்றத்திர் தெரிவித்தார். தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவற்றை கூறினார்

அவர் மேலும்  தெரிவிக்கையில்,

 

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது புல்டோ இனிப்பு கடைக்கு ஒப்பானது என்பதே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாளில் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் கிழக்கில் சாராய போத்தல்கள் பெட்டி பெட்டியாக கொண்டுவந்து பதுக்கிவைத்தது நினைவிற்கு வருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஆயிரம் ரூபா பணத்தை கொடுப்பதற்கு  தயார்படுத்திக்கொண்டிருந்தார். கொழும்பு மக்கள் களனி கங்கையில் பாம்பு தோன்றியதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதேபோல் ஒரு சிலர் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பார்கள் எனவும், மத்திய வங்கி ஊழல் வாதிகளை தண்டிப்பதாகவும் நம்பி வாக்களிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று திரும்பிப்பார்த்தால், வேடிக்கையாக உள்ளது.

கிழக்கில் மீன் கள்ளர்கள் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது, அவர்களையே பிடிக்க முடியாத இந்த அரசாங்கம் எங்கே சென்று ஈஸ்டர் தாக்குதல் காரர்களையும், மத்திய வங்கி ஊழல்வாதிகளையும் பிடிக்கப்போகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

இப்போது மக்களின் பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாடு மோசமான நிலையொன்றை சந்திக்க நேரும்.

இலங்கை மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை அரசாங்கம் சரியாக செய்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மாத்திரம் பேசிக்கொண்டு இருக்காது நாட்டின் பிரச்சினையை மூடி மறைக்க நினைக்கக்கூடாது.

ஹிஷாலினியின் மரணத்தை சாட்டாக வைத்துக்கொண்டு மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் முரண்பட வைத்து கலவரம் ஒன்றினை உருவாக்கி அதனை அடக்குவதாக சிங்கள மக்களை ஏமாற்றி திருப்திப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கையாண்டிருக்கும்.

நல்லவேளை நாட்டில் தேர்தல் ஒன்று இல்லை, அதேபோல் கொவிட் தடுப்பூசி திட்டம் அரசாங்கத்தை கைகொடுத்து வருவதால் இது நடக்கவில்லை. அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அமைச்சர்களே போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார்.