லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு

(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் (31) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன வயது (75) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்துள்ள குறித்த நடிகை இன்று (31) அதிகாலை நுவரெலியா – அட்டன் பிரதான வழியாக கொழும்புக்கு தனது வேனில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் பயணித்த வேன் லிந்துலை நகரத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேனை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.