கோட்டபாய ராஜபக்ஸ குடும்ப ஆட்சியுடன் சம்பந்தப்படுவதால்தான் மக்கள் மத்தியில் எதிர்ப்பு – அனுரகுமார திசாநாயக்க

கோட்டபாய ராஜபக்ஸ பழைய சிந்தனையற்றவர் என கூறப்பட்டாலும், குடும்ப ஆட்சியுடன் சம்பந்தப்பட்டவராக இருப்பதன் காரணமாகத்தான் மக்களிடம் எதிர்ப்பு வருகின்றது. பசளை, கொவிட், பொருளாதாராம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைப்புக்கள் அனைத்தும் பின்னடைவில் உள்ளன என மக்கள் விடுதலை முன்னணியிள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் சிங்கள , தமிழ் மொழி பேசுகின்ற ஊடகவியலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில்நுட்பத்திலான கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இதனால் நாட்டைக் கொண்டு செல்ல இயலாத நிலமை காணப்படுகின்றது. கடந்த வருடத்தினுடைய கடன் பழு 2 றில்லியன், மேலும் இந்த நாடு பணம் உழைக்க முடியாத பிரச்சனையில் காணப்படுகின்றது. ஒரு றில்லியன் கோடி பணம் முத்திரையிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக்கடன், பெறுவதில் ஆர்வம் காட்டியிருந்த எமது நாடு கடன் பழு மிக்க ஒரு நாடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் இருக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், மக்கள் குறிப்பாக தமிழ் பேசுகின்ற மக்கள் எமது கட்சியைப் பற்றி கடந்த காலங்களில் மொழிப்பிரச்சினை காரணமாக விளங்கிக் கொள்ளாத நிலமைதான் காணப்பட்டது. அது இந்த நிகழ்ச்சி காரணமாக அப்பகுதி மக்களுக்கும் சென்றடையும் என நினைக்கின்றேன்.
இந்த அரசாங்கம் 69 லட்சம் வாக்குகளைப் பெற்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றில் பெற்றுக் கொண்டது. அவர்கள் 2015 இல் தோல்வி அடைந்திருந்தாலும், மக்களிடத்தில் கோட்டபாய எனும் பெயர் நிலவி வந்தது. பின்னர் அவரிடமிருந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற தொனி மக்களிடத்தில் உந்தலை ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆட்சி தொடர்பில் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறவில்லை. இதனால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான ரணில், மைத்திரி அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றியிருக்கவில்லை.
மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வந்த அரசாங்கத்திற்கு மிகக் குறுகிய காலத்திற்குள் மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டபாய ராஜபக்ஸ பழைய சிந்தனையற்றவர் என கூறப்பட்டாலும், குடும்ப ஆட்சியுடன் சம்பந்தப்பட்டவராக இருப்பதன் காரணமாகத்தான் மக்களிடம் எதிர்ப்பு வருகின்றது.
பசளை, கொவிட், மற்றும், நாட்டின் பொருளாதாராம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைப்புக்கள் அனைத்தும் பின்னடைவில் உள்ளன. சுதந்திரம் கிடைத்து 73 வருடங்களில் எமது பொருளாதாரம், தற்போது ஒரு பாரதூரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.
1950 ஆம் ஆண்டு 100 கோடியாக காணப்பட்ட கடன் தற்போது 16.6 றில்லியனாகக் காணப்படுவதானது மிகவும் கவலையளிக்கின்றது. 1350 மில்லியன் வருமானமும், கடனாக 1976 மில்லியனும் உள்ளது. திறைசேரியின் இயலுமை போதாமலுள்ளது. வருமானத்தைவிட கடன் கூடுதலாக இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.