சுவிஸில் சிற்பக்கலாநிதி ஜீவரத்தினம் ஜெகதீசனுக்கு “தேர்க்கலைப்பேரரசு” பட்டம்.

சுவிற்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்துள்ள தாயகத்தைச் சேர்ந்த சிற்பக்கலாநிதி ஜீவரத்தினம் ஜெகதீசனை செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகத்தினரும் அனைத்துலக முருகபக்திமாநாட்டு குழுவினரும் இணைந்து “தேர்க்கலைப்பேரரசு” என்ற பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
பேர்ண் மாநிலத்தில் தொப்பன் நகரில் அருள்மிகு ஸ்ரீ  கல்யாணசுப்பிரமணியர் ஆலயத்திற்கு ஐரோப்பாவில் அதி உயர் சித்திரத்தேரை அமைத்துக் கொடுத்த சிற்பகலாநிதி ஜெகதீசன் அத்தேர்  வெள்ளோட்டத்திற்காக சுவிற்சலாந்துக்கு வருகை தந்துள்ளார்.
சிற்பகலாநிதி ஜெகதீசனை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை கதிர்வேலாயுதசுவாமி ஆலயநிர்வாகத்தினரும் அனைத்துலக முருகபக்திமாநாட்டு குழுவினரும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (23.07.2021) மாலை ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடி வெள்ளியை ஒட்டி ஆலயத்தில் இடம்பெற்ற விசேடபூசைகளை அடுத்து சிற்பக்கலாநிதியை கௌரவிக்கும் நிகழ்வு ஆலய நிர்வாகத் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஆலய நிர்வாகப் பொருளாளர் சதா அற்புதராஜாவின் வரவேற்புரையை அடுத்து ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ முத்துச்சாமிருக்களின் ஆசியுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம், உதயன் பத்திரிகை முன்னாள் செய்தியாசிரியர் ஞா.குகநாதன், சுவிஸ்விசன் ஊடகவியலாளர் எஸ்.பிரபாகரன், நாடகக்கலைஞர் செல்வரத்தினம் தேவசீலன்,லவுசான் மாநகரசபை உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சுவிஸ் நாட்டுக்கு வருகை தரும் கலைஞர்கள்,மூத்த அறிஞர்கள், புத்தியீவிகள் ஆகியோரை கௌரவிப்பது கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் முன்னிற்பதையிட்டு வாழ்த்துரை வழங்கியோர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
அதனைத் தெடர்ந்து “தேர்க்கலைப்பேரரசு”என்ற  பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி சிற்பகலாநிதி கௌரவிக்கப்பட்டார்.
அனைத்துலக முருகபக்திமாநாட்டுக்குழுவினர் சார்பில் மூத்த ஊடகவியலாளரான ஞா.குகநாதன், இரா.துரைரத்தினம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிற்பகலாநிதியை கௌரவித்தனர்.
கௌரவிக்கப்பட்ட சிற்பக்கலாநிதி ஜெகதீசன் ஏற்புரையில் தாயகத்தில் ஆலயங்களுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களிற்கு கணிசமான அளவு பக்தர்கள் வருகை தருவதை பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. சமயம் மீது புலம்பெயர்ந்த மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது என்று கூறிய அவர் தாயகத்திலிருந்து வருகை தந்த தனக்கு கதிர்வேலாயுதசுவாமி ஆலயநிர்வாகம் வழங்கிய கௌரவத்தையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
அனைத்துலக முருகபக்திமாநாட்டு குழுவின் ஆலோசகரான எஸ். ஜெயமோகனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவேறியது.