மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போதைப்பொருளை விநியோகித்தவர் கைது.

????????????????????????????????????

ந.குகதர்சன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிரபல போதை வியாபாரி உட்பட மூன்று நபர்கள் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான பொலிஸார் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல போதை வியாபாரியிடம் போதைப் பொருட்களை கொள்வனவு செய்வதாக வரவழைத்து கும்புறுமூலை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பிரபல போதை வியாபாரி உட்பட மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், இருதயபுரம், செட்டிப்பாளையம் ஆகிய  இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதை பொருளும், போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியே மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களுக்கும் ஐஸ் போதைப் பொருள் விநியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்ளுர் முகவர்கள், வியாபாரிகள், பாவனையாளர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வியாபாரியிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஐஸ் போதைப் பொருள் எனவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.