பொத்துவில் பிரதேசத்தில் காணாமல் போன மீனவர்கள் இருவர் 20 நாட்களின் பின்னர் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

(எஸ்.அஷ்ரப்கான்) கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை பொத்துவில் அறுகம்பை கடலிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். இம் மீனவர்கள் 20 நாட்களின் பின்னர் நேற்று அதிகாலை வீடு திரும்பினர். பொத்துவில் களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹமட் தாஹா, பொத்துவில் பசறிச்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய முஹம்மத் ஜாஃபர் என்ற இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்கள் ஆகும்.

அந்த மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், 2021 மூன்றாம் மாதம் 23ஆம் திகதி நாங்கள் கடலுக்கு போனோம். எங்களுக்கு ஒரு கொப்புறு மீன் பிடிபட்டது. அந்த மீனை நாங்கள் பிடித்த போது அந்த மீன் எங்களை கடலின் மிகவும் உயரத்துக்கு கொண்டு சென்றது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு சென்றோம். எங்களது இயந்திரமும் பழுதாகி பழுதடைந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கடலில் எங்களது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எவரும் இருக்கவில்லை அங்குமிங்கும் நாங்கள் பார்த்தோம். எங்களை காப்பாற்றும் அளவுக்கு யாரும் இருக்கவில்லை காற்றும் மிகவும் வேகமாக அடித்தது.

இதனால் எங்களை வேகமாக கடல் மிகவும் உயரத்துக்கு கொண்டு சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் யாருமில்லாததன் காரணமாக நாங்கள் 14 நாட்கள் நீரிலே தத்தளித்தோம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய இயந்திர படகு ஒன்றின் மிதப்பு ஒன்று எங்களுக்கு கிடைத்தது. நான்கு நாட்களின் பின்னர் எங்களுக்கு கிடைத்தது அதனை பிடித்துக்கொண்டு நாங்கள் கிடந்தோம். காலையில் அவர்கள் எங்களை அணுகி என்னவென்று கேட்டார்கள். எங்களது படகின் இயந்திரம் பழுதாகிவிட்டது. எங்களுக்கு உணவு தாருங்கள் என்று கேட்டோம். முதலில் நீங்கள் படகுக்குள் ஏறுங்கள் என்று கூறினார்கள். அதன் பின்னர் எங்களுக்கு போதுமான அளவு சாப்பாடு தந்தார்கள். எங்களது சகோதரர்கள் போன்று எங்களை கவனித்தார்கள். பின்னர் அவர்கள் எங்களை துறைமுகத்துக்கு கொண்டு சேர்ப்போம் என்று கூறினார்கள். பயப்பட தேவையில்லை என்றும் கூறினார்கள். பின்னர் அவர்கள் கடற் படையினருக்கு அறிவித்தல் கொடுத்தார்கள்.

கடலில் தத்தளித்தவாறு சிறிய படகில் வந்தவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றி வைத்திருக்கிறோம் என்று அவர்களிடம் கூறினார்கள். நாங்கள் அவர்களின் உதவியுடன் துறைமுகத்தை வந்தடைந்தோம் அவர்கள் எங்களிடம் வாய்மொழி எல்லாம் எடுத்து கையொப்பமும் எடுத்தார்கள். அந்த சிங்கள சகோதரர்களுக்கு நண்பர்களுக்கு நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடுஇ எங்களை தேடுவதற்கும் எங்களை காப்பாற்றுவதற்கும் மிகவும் முயற்சி செய்து செயற்பட்ட அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடுஇ ஊடகத்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்கள்.