தனிமைப்படுத்தப்படும் சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவேண்டும்! காரைதீவு பிரதேசசபையின் 41வது மாதாந்த அமர்வில் வலியுறுத்து!

(காரைதீவு சகா)கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்க சுற்றுநிருபத்திற்கமைவாக சம்பளம் வழங்கப்படவேண்டும். குறிப்பாக எமது சபையால் கொரோனாவால் மரணித்தவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் நிவாரணமும் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 41வது மாதாந்த அமர்வில் தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களால் வலியுறத்தப்பட்டது.
சih அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் சுகாதாரவிதிமுறைப்படி நடைபெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் சமுகமளித்த சபையில், காரைதீவில் முதன்முதலாக மரணித்த சபை ஊழியர் வி.சுரேந்திரனின் குடும்பத்திற்கு மனிதாபிமானரீதியில் உதவவேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. அதற்கமைய தவிசாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தமது நிதிபபங்களிப்பை நல்கியிருந்தனர்.

ஆனால் மரணித்த அந்த ஊழியருக்கு எமது சபைமுன்னால் அனுதாபஅஞ்சலி அறிவித்தல் இடப்படவேண்டும் எனக்கோரியும் அது நிறைவேற்றப்படாதமை கவலைக்குரியது என குறிப்பிடப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட சபை ஊழியருக்கும் சம்பளம் வழங்கப்படாதமை கவலைக்குரியது.
நாம் நினைத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின்கீழுள்ள பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கியிருக்கமுடியும்.

காரைதீவு பிரதேசசபை முன்மாதிரியாக சிறப்பாக செயற்பட்டுவருகின்றது என்ற நம்பிக்கை தொடர்ந்தும் காப்பாற்றப்படவேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். உயரியசபை என்பதற்கான அர்த்தம் அதன் செயற்பாட்டில் தெரியவேண்டும்.

சட்டத்திலிருக்கும் சாதகமான விடயங்களை மக்களுக்காக நாம் பயன்படுத்தவேண்டும். மக்களால் வந்தவர்கள் நாங்கள். எனவே அந்த மக்கள் கஸ்ட்டப்படும்போது நாம் உதவவேண்டும்.செயலாளர் இதுவிடயத்தில் பொடுபோக்குத்தனமாகச் செயற்பட்டால் சபை மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டனர்.