கல்முனை பிராந்தியத்திற்கு முதற்கட்டமாக பல உதவிகளை வழங்க நடவடிக்கை.செ.கஜேந்திரன் பா.உ

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை  நேரில் சென்று சந்தித்து குறைகள் தேவைகள் தொடர்பாக  தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  பாராளுமன்ற  உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று(10) குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினருடன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ்   கலந்துரையாடலில்    ஈடுபட்ட பின்னர்   அப்பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைய    பொதுக்கிணறு ஒன்றினை சுத்திகரிப்பு செய்து புனர்நிர்மாணம் நடவடிக்கை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கைத்தறி உற்பத்தி  உபகரணம் அடங்கிய தொகுதி ஒன்றும் குடும்பம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதுடன்  அவர்களது வருமானத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக  திட்டமும்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அம்பாறை மாவட்டத்தில்   கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இத்தொடர்மாடி வீட்டுத்திட்டம் பல  குறைகளுடன்  நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல்   இருப்பது கவலைக்குரியது.இங்கு  வாழும் மக்கள்  பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த தொடர்மாடி குடியிருப்பு வீதிகள்  குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது.எதிர்வரும் சில தினங்களில்  முதற்கட்டமாக பல உதவிகளை  வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன். மழை காலங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக இங்குள்ள பொதுமக்கள் என்னிடம்  தெரிவித்துள்ளனர் என்றார்.

இவ்விஜயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட  இளைஞர் தலைவர் துசானந்தன் சமூக சேவகர்  தாமோதரம் பிரதீபன் உட்பட  இளைஞர்களும் பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில்  உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள்    பாராளுமன்ற உறுப்பினர்  செல்லவராசா கஜேந்திரனால்     வழங்கி வைக்கப்பட்டது .

இவ்வுலருணவு பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட  இளைஞர் தலைவர் துசானந்தன்  தலைமையில் நடைபெற்றது.குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 100க்கும் அதிகமான தமிழ் பேசும் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய இரு  வேறு வேலைத்திட்டங்களும்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புலம்பெயர் மக்களின் ஆதரவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.