பஷீரை தேசிய பட்டியல் எம். பி ஆக்கி பசிலுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்

அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வலியுறுத்து
முன்னாள் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகு தாவூத்தை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் பாராளுமன்றத்துக்கு மொட்டு கட்சி  அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கோரி உள்ளது.

அக்கரைப்பற்றில் வைத்து ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பாக தெரிவித்தவை வருமாறு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பாராளுமன்ற பிரவேசம் எவ்வாறு காலத்தின் கட்டாயமோ அவ்வாறே நாட்டு பற்றாளரும், மூவின மக்களாலும் நேசிக்கப்படுகின்ற தலைவரும், சமாதான தூதுவரும், இராஜதந்திரியுமான் பஷீர் சேகு தாவூத்தின் பாராளுமன்ற பிரவேசமும் இக்கால கட்டத்தில்  மிக மிக அவசியமானது ஆகும்.
மனித நேய செயற்பாட்டாளரும், மக்கள் சேவையாளருமான பஷீர் சேகு தாவூத் ராஜபக்ஸக்களின் விசுவாசியும் ஆவார். ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீளெழுச்சிக்கு பின்னால் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து இவர் வகுத்து கொடுத்து வியூகங்கள் நிறைந்து நிற்கிறன.
 குறிப்பாக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்தபோது மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கு பின்னால் இவரின் சாணக்கியம் பஷில் ராஜபக்ஸவுக்கு பேருதவியாக அமைந்தது.
அதே போல புதிய கட்சி ஒன்றை ஸ்தாபித்து குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியையும், பிரதமரையும் அக்கட்சியில் இருந்து உருவாக்கிய பஷில் ராஜபக்ஸவின் அரசியல் சித்துக்கு பின்னால் பஷீர் சேகு தாவூத்தின் புத்தியும், சத்தியும் இணைந்து நிற்கின்றன.
நாடு தற்போது முன்னெப்பொழுதும் இருந்திராத வகையில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் பஷில் ராஜபக்ஸ பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க வேண்டி நேர்ந்து உள்ள இத்தருணத்தில் அவருடன் கூடவே பஷீர் சேகு தாவூத்தும் பாராளுமன்றம் வருதல் வேண்டும். இது நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும்,  மக்களுக்கும், ராஜபக்ஸக்களுக்கும் பெருநன்மை பயக்கின்ற முன்னெடுப்பாக அமையும்.
இதற்கு அமைய பஷீர் சேகு தாவூத்தையும் உடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்கிற பெருவிருப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ் இருக்கின்றார் என்றும் நாம் அறிகின்றோம். அது பஷில் ராஜபக்ஸவின் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடும் ஆகும். அவ்வாறான ஒரு உறுதிமொழி வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய கிடைக்கின்றது.
பேருவளையை சேர்ந்த தொழிலதிபர் வர்த்தகர் மர்ஜான் பழீல் மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம். பி ஆவார். ராஜபக்ஸக்கள் கோருகின்ற பட்சத்தில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமலேயே எம். பி பதவியை எப்போது வேண்டுமானாலும் துறக்க தயாராக இருப்பவர். இவரை பதவி துறக்க செய்வதன் மூலம் ஏற்படுகின்ற வெற்றிடத்துக்கு பஷீர் சேகு தாவூத்தை நியமிக்க முடியும் என்கிற பொருத்தமான ஆலோசனையையும் முன்வைக்கின்றோம்.