வெருகல் பூநகர் பிரதேசத்தில் கோழிவளர்ப்பை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
வெருகல் பூநகர் பிரதேசத்தில் செளபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் கோழிவளர்ப்பை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02)வெருகல் பிரதேச செயலாளர் கே.குணனாதன் தலைமையில் நடைபெற்றது.
இதற்காக 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்ற எதிர்பார்க்கப்படுகின்றது.15000 கோழிக் குஞ்சுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.இதற்காக 82 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதத்தை திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரளவுடன் இணைந்து திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளாவும் வழங்கி வைத்தனர்.
இத்திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ளும்போது மாதமொன்றிற்கு 30000-40000 இடைப்பட்ட வருமானத்தை பெறமுடியும்.
வருமானம் குறைந்த மக்கள் அதிகமாக வாழும் இப்பிரதேசத்தில் எவ்வித வேறுபாடின்றி அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்து பிரதேச அவிருத்தியை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் தமது பிரதேச அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்போது இன்னும் பல அபிவிருத்திகளை இப்பிரதேசத்திற்கு கொண்டு வர முடியும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் ,சக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.