அமரர்.தங்கத்துரை அவர்களின் அரசியல்காலம் தமிழ் மக்களுக்கான பொற்காலமாக விளங்கியது.

எப்.முபாரக்  
திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தங்கத்துரை அவர்களின் அரசியல்காலம் தமிழ் மக்களுக்கான பொற்காலமாக விளங்கியது. அவருடைய இழப்பு இன்றும் நிரப்பப்படாத இடைவெளியாகவே காணப்படுகின்றது என மூதூர் பிரதேச சபை உபதவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 24வது ஆண்டு நினைவுதினத்தை (05.07.2021) முன்னிட்டு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர். தங்கத்துரையினுடைய அரசியல்காலம் தமிழ் மக்களால் பொற்காலமாக உணரப்படுகின்றது ஏனெனில் அவர் அரசியலில் இருந்த காலப்பகுதியில்தான் தமிழ் மக்களின் பல பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டன. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான பல வேலைவாய்ப்புகளும், பல குடியேற்றங்கள் மூலம் பல ஏழைகளுக்கான வாழ்விடங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இவை பலமான அரசுக்கு எதிராக எதிர் வரிசையில் இருந்து சாதித்தவை என்றால் அது தங்கத்துரையின் அரசியல் சாணக்கியம் என்றுதான் கூற வேண்டும். இதனால் இன்றும் இவர் ஏழை மக்களால் கடவுளாக பார்க்கப்படுகின்றார் என்பதை அவர்களின் வீட்டுச் சுவரில் புன் சிரிப்புடன் இருக்கின்ற அவரது புகைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் எதிர்காலம் கல்வியிலும், விவசாயத்திலுமே தங்கியிருக்கிறது என்ற தூர நோக்குடன் செயற்பட்டு தனது அரசியல்காலங்களில் அது தொடர்பான அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தியிருந்தார். அதன் பலனாக பல கல்விச் சாலைகள் உருப் பெற்றதோடு பல குளங்களும் புத்துயிர் பெற்றிருந்தன. அந்த காலத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை பிரதி அமைச்சராகவும் இருந்த ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களும் தங்கத்துரை அவர்களும் அரசியலில் ஜாம்பவான்களாக இருந்தார்கள். அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையில் போட்டித்தன்மை இருந்தாலும் மக்களுக்கான பணியை இணைந்தே முன்னெடுத்திருந்தார்கள். அந்தவகையில் அவருடைய ஒத்துழைப்பையும் பெற்று பல சேவைகளை இனம், மதம், மொழி வேறுபாடு இன்றி அனைவருக்கும் வழங்கியிருந்தார். குறிப்பாக பல இஸ்லாமிய மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் வேலைவாய்ப்பைக்கூட பெற்றுக் கொடுத்திருந்தார். இவரை இஸ்லாமிய மக்கள் தங்கத்துரை அண்ணன் எனவும் சிங்கள மக்கள் தங்கத்துரை மாத்தையா எனவும் உரிமையோடு அழைக்குமளவிற்கு முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான நெருக்கத்தை அவர் கொண்டிருந்தார். இதனை மெய்ப்பிக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளரான மூதூர் அனஸ் அவர்களினால் “தங்கத்துரைக் காவியம்” என்ற நூல் வெளியிடப்பட்டிருந்தது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். எனவே இதுபோன்றதொரு இன நல்லுறவுடன் மக்களுக்கு சேவையாற்றிய அரசியல்தலைவனை நாம் இழந்து விட்டோம். அவருடைய இழப்பு மூதூர் பகுதி மக்களுக்கு பெரியதொரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது.