கொரோனா ஜனாஸா நிதி வசூலிப்பா – ஓட்டமாவடி பிரதேச சபை பொலிஸில் முறைப்பாடு

ந.குகதர்சன்

கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப் பணியினை மிகச்சிறப்பாக சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தனது சபை ஊழியர்களைக் கொண்டு மேற்கொண்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் கொவிட்- 19 தொற்றுக் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் எனப்பல தரப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்கத்திகென ஒதுக்கப்பட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் சூடுபத்தினசேனைக் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இனங்களுக்கிடையிலான உறவுகளைச் சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கில் பலர் ஜனாஸா நல்லடக்க விவகாரத்தில் பல தரப்பட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஜனாசா நல்லடக்கத்திற்கென நிதி வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இவ்விவகாரத்தை வைத்து சர்வதேச ரீதியில் ஒட்டமாவடி பிரதேசத்திற்கும் பிரதேச சபைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபரும் பிரதேச சபை நிர்வாகமும் திட்டவட்டமாக ஒரு விடயத்தை மக்களுக்கு கூறியுள்ளது.

கொவிட் -19 ஜனாஸா நல்லடக்கதிற்காக எவ்வித பணத்தையும் எவரிடமும் அறவிடவில்லை எனவும் எவருக்கும் ஜனாசா நல்லடக்கதிற்காக பணம் வழங்க வேண்டாம். அவ்வாறு எவரும் பணம் கேட்பார்களானால் உடனடியாக குறித்த நபர்கள் பற்றிய தகவல்களை அறியத்தருவதுடன், அது தொடர்பான ஆதாரங்களை தம்மிடம் கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் போலிப்பிரசாரங்களை மேற்கொண்டு தேசிய ரீதியில் ஜனாஸா நல்லடக்கப் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வேலைத்திட்டத்தை சிலர் முன்னெடுக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருவதுடன், பொய்ப்பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பிலும் இவ்வாறு ஜனாஸா அடக்கத்திற்கு என நிதி வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அறிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அரியத்தருவதுடன், பிரதேச சபையின் கவனத்திற்கு ஆதாரபூர்வமான தகவல்களை வழங்குமாறு பிரதேச சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது மாத்திரமல்லாமல், இது தொடர்பான மோசடிகள் இடம்பெற்றால் அது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், இவ்வாறு ஆதாரமற்ற பிரசாரங்களை சமூக ஊடகங்களினூடாக மேற்கொள்ளும் நபர்களை அடையாளங்கண்டு உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பொலிஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினருக்கு உத்தியோகபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபரினால் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வாழைச்சேனை நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.