தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தவர்களுக்கு பெறுமதி மிக்க உலருணப் பொதிகள்.

(எம்.ஏ.றமீஸ்) கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையில் தமது வாழ்வாதாரத்தினை இழந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் சொலாறிஸ் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் இன்று(01) முன்னெடுக்கப்பட்டது.

உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாடு தழுவிய ரீதியில் இருபதாயிரம் வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு பெறுமதி மிக்க உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் சொலாறிஸ் எனர்ஜி நிவாரணத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சுமார் 200 குடும்பத்தவர்களுக்கு இந்நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி, திராய்க்கேணி, சம்புநகர் மற்றும் ஆலம்குளம் போன்ற பகுதிகளில் நாளாந்த வருமானத்தினை இழந்தவர்கள், விஷேட தேவையுடையவர்கள், விதவைகள், அநாதைகளைக் கொண்ட குடும்பத்தவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பத்தவர்கள், வருமானம் குறைந்த குடும்பத்தவர்கள் போன்றோருக்கு இந்நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது சொலாறிஸ் எனர்ஜி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.மயூரன்இ நிறுவனத்தின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் ஏ.ஆர்.அர்ஷாத், மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.தயாளன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சொலாறிஸ் எனர்ஜி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.எம்.பி.பகனின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் மூலம் பல குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் நன்மை பெற்று வருவதாகவும், தமது நன்றியினையும் இந்நிறுவத்தினருக்கு தெரிவிப்பதாகவும் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.