மருதமடு அன்னையின் விழாவுக்காக மடு அன்னை ஆலயம் செல்வோருக்கு ஆன்டிஜென் பரிசோதனை.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு ஆடி மாத பெருவிழாவானது இம்முறை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறையின் அறிவுரைக்கு அமைவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் மூன்று ஆயர்கள் இணைந்து இவ் விழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுக்க இருக்கின்றனர். அத்துடன் மருதமடு அன்னையின் விழா அன்று மடுவுக்கு செல்வோருக்கான கொரோனா ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழாவானது கடந்த 23 ந் திகதி (23.06.2021) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் இரண்டாம் திகதி (02.07.2021) நிறைவுபெற இருக்கின்றது.

கடந்த காலங்களில் இவ் பெருவிழாவுக்கு வருடந்தோறும் இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் சுமார் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வது வழமையாகும்.

ஆனால் இம்முறை கொரோனா தொற்றுநோய் இலங்கையில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இவ் நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசானது இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து வருவதனால் அரச சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒரு நிகழ்வில் முப்பது நபர்களுக்கு குறைவானவர்களே கலந்துகொள்ள முடியும்.

இதன் நடைமுறைகளுக்கு அமையவே இவ் விழாவும் இம்முறை இடம்பெறுகின்றது. 02.07.2021 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் இவ் மருதமடு அன்னையின் பெருவிழா காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் குருணாகல் மறைமாவட்ட ஆயர் மேதகு ஹரல்ட் அன்ரனி ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அன்ரன் றஞ்சித் ஆண்டகை ஆகியோர் கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுப்பர்.

இதைத் தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைகோட்ட ரீதியாக ஆறு திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கான ஒழங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்ள இருக்கும் பக்தர்களின் பெயர்கள் பங்கு தந்தையர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

இவ் மருதமடு அன்னையின் பெருவிழா அன்று அங்கு நடைபெறும் திருப்பலிகளில் பங்குபற்றச் செல்லும் அனைவருக்கும் கொரோனா நோய்க்கான ஆன்டிஜென் பரிசோதனை புதன்கிழமை (30.06.2021) சுகாதார சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு நோய் தொற்று இல்லாதவர்களுக்கு மட்டுமே அத்தாட்சப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இம்முறை மடு ஆலய பகுதிக்குள் எந்தவித கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இயங்கிவரும் ஒரேயொரு சிற்றுண்டிச்சாலைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.