துமிந்தவின் விடுதலைக்காகத்தான் ஏனைய கைதிகளின் விடுதலைகள் இடம்பெற்றதா? (பிரசன்னா இந்திரகுமார்)

பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு, அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தiலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அரசியற் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு என்னும் அடிப்படையில் பதினாறு தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விடயம் உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏனைய அரசியற் கைதிகளையும் விரைவில் விடுவிப்பதற்கு ஜனாதிபதி உஎள்ளிட்ட அரசு முன்வர வேண்டும்.

அரசியற் கைதிகளின் விடுதலை மற்றும் சாதாரண கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் துமிந்த சில்வா அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதானது துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா என எண்ணத் தோணுகின்றது. துமிந்தவின் விடுதலை தொடர்பில் தமிழர் தரப்பில் இருந்து கேள்விகள் வந்து விடக் கூடாது என்பதற்காக எமது அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றதா? என்கின்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

என்ன நடக்கின்றது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று வார்த்தையில் மாத்திரம் சொல்லிக் கொண்டு பேரினவாதத்திற்கு ஒரு சட்டமும் ஏனைய சமூகத்திற்கு ஒரு சட்டமும் என்ற விதத்தில் சட்டப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா வெறும் ஐந்தே ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். தண்டனைக் கைதியாக இருந்த ஞானசார தேரரும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். அதே போல ஒரு இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞனும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இதே நாட்டில் தான் ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். அத்தோடுஇ இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் அவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். இவர்களை போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சிறையில் இன்னும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன்இ சமூக வளைதளங்களில் பதிவுகள் இட்டதன் அடிப்படையில் மட்டும் இளைஞர்கள் உட்பட 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் காரணங்கள் இன்றி தடுத்து வைத்து இருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் சகலரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியும் அடிமைப்படுத்தியும் வைத்திருப்பதற்கே திட்டங்களை வகுக்கின்றன. மதகுரு என்ற ரீதியில் ஞானசாரதேரருக்கு சட்டம் வளைய முடியுமாக இருந்தால் ஏன் ரகுபதி சர்மாவிற்கும் இதே அடிப்படையில் சட்டம் பிரயோகிக்கப்பட முடியாது? ஆளாளுக்கு ஒவ்வொரு விதமதாகச் சட்டத்தினைப் பிரயோகிப்பதையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் ஜனாதிபதி உட்படுத்துகின்றாரா?

எனவே பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாதஇ பயங்கரவாத சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.