துமிந்த சில்வாவின் விடுதலை பல நாட்களாக எழுதப்பட்ட திரைக்கதை (இம்ரான் எம்.பி)

(பைஷல் இஸ்மாயில்) துமிந்த சில்வாவின் விடுதலை பல நாட்களாக எழுதப்பட்ட திரைக்கதையாகும். அது இப்போது நிறைவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

நேற்று (24) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

துமிந்த சில்வாவின் விடுதலை பற்றி பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். அவரின் விடுதலை பற்றி ஆச்சரியப்படுவதுக்கு ஒன்றுமில்லை. அவரின் விடுதலை என்பது பல வருடங்களாக எழுதப்பட்டுவந்த திரைக்கதை வசனங்களாகும் அது இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த திரைக்கதை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதே எழுத ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நல்லாட்சி அரசு கவிழ்க்கப்பட்டதுக்கும் அத்திரைக்கதையில் பெரும்பங்குண்டு. ஹிரு அலைவரிசை அதற்கு பெரும்பங்காற்றியது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபின் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகளில் அவர்களுக்கு தேவையான பகுதி மட்டும் வெளியிடப்பட்டது, அமைச்சர்கள் மதகுருமார்களின் கருத்துக்கள் மற்றும் கடிதங்கள் மற்றும் ஊடக சந்திப்புக்கள், உயர்நீதிமன்றத்தில் தீ பரவியமை, ரஞ்சன் ராமநாயக்கவின் கைது என சென்ற அந்த திரைக்கதையின் இறுதிப்பகுதியாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.

அதன்பின் இன்று தமிழ் அரசியல் கைதிகளின் முதுகுக்கு பின்னால் மறைக்கப்பட்டு துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆளும்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிள்ளையான், துமிந்த சில்வா போன்றோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சன் ராமநாயக்க, றிசாத் பதியுதீன், அசாத் சாலி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவே ஒரே நாடு ஒரே சட்டம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.