இறந்த தங்கமகளை தயவுசெய்து தாருங்கள்! தாய் கதறியழுது ஒப்பாரி!

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா) எனது சீதேவி மகளின் உடலை தாருங்கள். அவள் மரணித்து ஜந்து நாட்களாகின்றன.இன்னும் மகளைக்காணவில்லை. என்ன நடக்கிறது? சட்டம் ஏன் இப்படி எங்களை வதைக்கிறது? என்ன நீதி? நாங்க சமயமுறைப்படி அவருக்கான கடமைகளை கடமைகளை செய்வதில்லையா?எனது தங்கமகளை தயவுசெய்து தாங்க?

இவ்வாறு காரைதீவில் 5தினங்களுக்குமுன் தூக்கில்தொங்கி மரணித்தவரின் தாயார் திருமதி சுகுமார் ஒப்பாரிவைத்து கதறியழுது வேண்டுகோள்விடுத்தார்.

காரைதீவில் கடந்த வெள்ளிக்கிழமை (18) அன்று தற்கொலை செய்து மரணித்த சுகுமார் டினேகா (வயது 17)வின் பூதவுடலை குடும்பத்தாரிடம் கையளிக்க அரசும் நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மரணித்த சுகுமார் டினேகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் நேற்று (22) மாலை இறந்தவரின் வீட்டுக்கு முன்னால் மேற்கொண்டனர்.

குறித்த சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வைத்தியத்துறை சட்டநீதித்துறை நிருவாகச்சிக்கல் காரணமாகவே பிரேதபரிசோதனை இழுத்தடிக்கப்படுவதாகவும் சடலம் ஒப்படைக்கப்படுவதில் தாமதம் நிலவுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இறந்தவரின் தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் தங்களின் மகளை நல்லடக்கம் செய்ய பூதவுடலை கையளிக்குமாறும் அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு நடத்துமாறும் நீதிபதி அவர்கள் மனிதாபிமானத்துடன் இதுதொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பாரியுடன் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.

அங்கு கருத்துரைத்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்:
24மணிநேரத்துள் மரணச்சடங்கு செய்யவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தும் இந்த பூதவுடல் 5நாட்களாகியும் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவரது தாயார் பெற்றோர்கள் இன்னமும் உணவின்றி கவலையுடன் தவிக்கிறார்கள். 5நாட்களாகியும் இன்னும் சடலம் ஒப்படைக்காதது ஏன்? பெற்றார் ஊர்பொதுமக்கள் இந்த சடலம் எப்போது வரும்? எப்போது அடக்குவது என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனிந்த அதிகாரிகள் இன்றைய கொரோனா காலகட்டத்தில் மக்களை இப்படி வதைக்கிறார்கள்? அவர்கள் சரியாக தமது கடமையைச் செய்திருந்தால் இவ்வாறு மக்கள் பூதவுடலுக்காக வீதியில் இறங்கவேண்டி வந்திருக்காது. என்றார்.

சமுகஆர்வலர் வெ.ஜெயகோபன் கூறுகையில்: சம்மாந்துறை நீதிவான் சட்டத்திற்கு அப்பால் மனிதாபிமானம்கருதி இந்த பூதவுடலை அடுத்த 24மணிநேரத்துள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டு;ம். தமிழ்மக்களின் கலாசாரத்தை நன்கறிந்த எமது மாவட்ட நீதிவான் நீங்கள். இந்தப்பெற்றோர்கள் படும் வேதனையைப்பார்க்கமுடியாது. மரணம் அனைவருக்கும்வரும். சட்டப்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்.ஆனால் இறுதிக்கிரியைகளை செய்வதற்கு பூதவுடலை ஒப்படையுங்கள். என்றார்.

தற்கொலை செய்து இறந்த சுகுமார் டினேகாவின் பூதவுடல் மரண விசாரணைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.