செட்டிபாளையம் கிராமத்தில் கலைகளை வளர்த்த   கலையாளுமை கவி விநாயகமூர்த்தி

செட்டிபாளையம் கிராமத்தில் கலைகளை வளர்த்த   கலையாளுமைகளுள் கவி விநாயகமூர்த்தி அவர்களும் மிகப்பிரதானமானவர் ஆவார்.
இவர் 1929.08. 24ம் திகதி கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு இளையமகனாக களுதாவளையில் பிறந்தார். வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் தனது கல்வி படிப்பினை பூர்த்தி செய்து குண்டகசாலை விவசாய பயிற்சி பாடசாலையில் தனது உயர் படிப்பினை நிறைவு செய்தார்.
1958ஆம் ஆண்டு விவசாய விரிவாக்க உத்தியோகத்தராக தனது அரச கடமையினை ஆரம்பித்தார்
1962 ஆண்டு செட்டிபாளையத்தில் சம்புநாதன் கிருபையம்மாவை திருமணம் செய்தார்.
இவர் அக்காலத்தில் இக்கிராம விவசாயத்தில் புரட்சியினை ஏற்படுத்தியவர். தனது வேலை பரப்போடு நின்றுவிடாது கலைப்பணி கல்விப்பணி சமூகப்பணி கூடவே ஆன்மீக நாட்டம் மிகுந்தவராக இனங்காணப்பட்டார்.
மரபுக் கவிதை உலகில் பிரகாசித்த இவரரை 1998 ஆம் ஆண்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் சிறந்த கவிஞராக பாராட்டி பொன்னாடை போற்றியது. மேலும் அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட எழுவான் மலரில் இவரின் கலை உலகம் பற்றிய முனைப்புகளை பதிவு செய்திருந்தது  இவர் “செட்டிபாளையம் நளின கலா  மன்றத்தின் உருவாக்கத்தில் தோளோடு தோள் நின்று செயற்பட்டவர்.கவி என்ற புனைபெயரில் அறிமுகமான இவர் 600க்கு மேற்பட்ட கவிதைகளையும் 60 க்கு அதிகமான சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டவர் அவற்றில் அனேகமானவை வீரகேசரி சுதந்திரன் தினகரன் ஈழகேசரி ஐக்கிய தீபம் கமத்தொழில் தலையாளி விவேகி முதலான பத்திரிகைகளில் அவரது ஆக்கங்கள் வாரம் தப்பாது வெளியிடப்பட்டு வந்தன.
இக்கிராமத்தின் புகழைக் கூறும் “செட்டிபாளையம் புகழ் வளர்நாடு” என்னும் கவிதை முக்கியத்துவம் வாய்ந்தது.
இவரது கவிதைகள் இலங்கை வானொலியிலும் அக்காலத்தில் ஒளிபரப்பப்பட்டிருந்தது குறிப்பாக வானொலி கவியரங்கிலும் இவர் கலந்து கொண்டு இக்கிராமத்தின் புகழை உலகறியச் செய்ததோடு இதன் மூலம் பல வானொலி நேயர்களின் நன்மதிப்பையும் அக்காலத்தில் பெற்றிருந்தார். காலக் கண்ணாடியாக பல்வேறுபட்ட சமூக சீர்திருத்த நாடகங்களை எழுத்துருவாக்கம் செய்து பிரசவித்துள்ளார் அக்காலத்தில் “யார் தெய்வம்” “கண்ணகி” போன்ற நாடகங்கள்  அக்காலத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தன கலாசார பேரவை போட்டிகள் ஆலய திருவிழாக்களில் இவரது நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் செயலாளராக இருந்த காலகட்டத்தில் “ஆனந்தகிரி” என்னும் மலருக்கான இதழ்ழாசிரியராகவும் செயற்பட்டிருந்தார்.
செட்டிபாளையம் கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றின் தலைவராகவும் செட்டிபாளையம் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பணிசெய்திருந்ததார்.
நல்லொழுக்கமும் சமூகப்பற்றும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட இவர் 23.06.2001 ஆண்டு இயற்கை எய்தினார் அவர் விட்டுச்சென்ற பணிகளை பின் வந்தோர் செய்வதற்குமுன்வருவதுடன் அவரது தடயங்களை ஆவணப்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.