அம்பாறை மாவட்டத்தில் முதலாவது ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நியைமாக திறந்து வைப்பு

(எம்.ஏ.றமீஸ்)
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக புனரமைக்கப்பட்டு இன்று(21) திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகார எல்லைக்குட்பட்ட முதலாவது ஆயுர்வேத வைத்தியசாலை இவ்வாறு கொவிட் தொற்றாளர்களைப் பராமரிக்கும் சிகிச்சை நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்திய சுதேச வைத்தியத்துறை இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வின்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பகுதியில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்களை பராமரிக்கும் வகையில் இவ்வாறான சிகிச்சை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இவ் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 40 நோயாளர்கள் தங்கி சிசிச்சை பெறும் வகையில்  வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் ஆயுர்வேத வைத்தியசாலையில் சேவையாற்றி வரும் வைத்தியர்களும், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்களும்,  பிற வைத்தியசாலைகளில் இருந்து கடமைக்கு அமர்த்தப்பட்ட தாதி உத்தியோகத்தர்கள் பயிற்சியளிக்கப்பட்ட சுகாதார சேவைகள் போன்றோர் இங்கு அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்து பராமரிக்கவுள்ளனர்.
மேலைத்தேய வைத்திய சிகிச்சை முறைகளுக்கு மேலதிகமாக இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களுக்கு  ஆயுர்வேத சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.
இத்தள ஆயுர்வேத வைத்தியசாலை மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் தற்போது இவ்வைத்தியசாலையின் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் சுமார் 100 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறும் கொவிட் சிகிச்சை நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
கொவிட் தொற்றாளர்களைப் பராமரிக்கும் வகையில் கல்முனை பிராந்தியத்தில் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் கொவிட் சிகிச்சை நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவ்விரு வைத்தியசாலைகளிலும் சுமார் 190 நோயார்கள் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மேலாக புதிதாக அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் மூலம் மேலும் 140 பேர் சிகிச்சை பெறவுள்ளனர்