எரிபொருட்கள் மீதான விலை அதிகரிப்பானது வாகனம் வைத்திருப்பவர்களைவிட வாகனம் இல்லாதவர்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

எரிபொருட்கள் மீதான விலை அதிகரிப்பானது வாகனம் வைத்திருப்பவர்களைவிட வாகனம் இல்லாதவர்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருட்கள் மீதான விலை அதிகரிப்பானது பெரும்பாலான பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைகின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினது விலையும் எவ்விதமான அறிவித்தலுமின்றி இரகசியமான முறையில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் இன்னுமொரு நெருக்கடிக்குள் மக்களை அரசு தள்ளியுள்ளது. இதனால் நாளாந்தம் உழைத்து தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்கின்ற மக்கள் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்கும் முகமாக தனியார் வாகனங்களின் பாவனையை குறைத்துக் கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் கூறுவது நியாயமற்றதாகும். எரிபொருட்களின் மீதான விலை அதிகரிப்பானது வாகனம் வைத்திருப்பவர்களைவிட வாகனம் இல்லாத ஏழை மக்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அமைச்சர் உணர வேண்டும். இதனால் பெரும்பாலான ஏழைகள் மூன்றுநேர உணவைத் தவிர்த்து இரண்டு நேரமாக்கி சமாளித்து வருகின்றார்கள் என்பதையும் அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அரசின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இதன் வலிகள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக விலை குறைப்பினை மேற்கொண்டு ஏழைகளை பட்டினிச் சாவில் இருந்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.