முறையான அனுமதிப் பத்திரமற்று வீதிகளில் உலாவுவோர் மீது பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை.

(எம்.ஏ.றமீஸ்) கொவிட் தொற்றின் ஆபத்தான நிலைமையினை நோக்கி கல்முனைப் பிராந்தியம் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தினுள் இப்பிராந்தியத்தில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோரு இரு மரணங்களும் பதிவாகியுள்ளது. இக்கால கட்டத்தில் முறையான அனுமதிப் பத்திரமற்று வீதிகளில் உலாவுவோர் மீது பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இக்கால கட்டத்தில் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

நிந்தவூர் பிரதேசத்தில் இருவர் கொவிட் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தினுள் மரணமடைந்துள்ளனர். இவ்விரு மரணங்களும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 தொற்றாளர்களும், காரைதீவு பிரதேசத்தில் அறுவரும், இறக்காமம் பிரதேசத்தில் நால்வரும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், நிந்தவூர் பிரதேசத்தில் இருவரும். கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் என இப்பிராந்தியத்தில் 39 தொற்றாளர்கள் 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கல்முனை பிராந்தியத்தில் உள்ள கொவிட் தொற்றாளர்களை பராமரிக்கும் பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 67 நோயாளர்களும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் நூறு நோயார்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இவ்விரு சிகிச்சை நிலையங்களுக்கும் 19 நோயாளர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதேவேளை அக்கரைப்பற்று நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 1109 பேரும்,அட்டாளைச்சேனை மத்திய நிலையத்தில் 90 பேரும், ஒலுவில் தனிமைப் படுத்தல் மத்திய நிலையத்தில் 44 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் அதி வேகமாக கொவிட் தொற்று பரவி வருவதனால் இப்பிராந்தியத்தில் மிக இறுக்கமான சுகாதார நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. முறையான அனுமதிப் பத்திரமற்று வீதிகளில் உலாவி வருபவர்கள் மீது பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பொதுமக்கள் நிலைமையினைக் கருத்திற் கொண்டு தாமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொவிட் தொற்றிலிருந்து கல்முனைப் பிராந்தியத்தினை மாற்றியமைக்க முன்வர வேண்டுமெனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.