(நூருல் ஹுதா உமர்) இலங்கை அரசு கொழும்பில் சீன ஈழத்தை (துறைமுக நகரம்) வழங்கியுள்ளது. இதனால் இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும். இனிமேல்தான் இதன் விளைவை இலங்கை அரசு அனுபவிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றிரவு (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் நான்காம் கட்டமாக எங்களின் நிவாரணப்பணி அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாழிலிருந்து மலையகத்தை நோக்கி சென்ற எங்களின் நிவாரணப்பணியின் போது இருந்த சோதனை சாவடிகளுக்கும் மலையகத்திலிருந்து அம்பாறைக்கு வரும் போது இருந்த சோதனை சாவடிகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் அறிந்தவரை நிறைய சோதனைசாவடிகள் இருக்கிறது. எங்களின் பயணங்களின் போது நாங்கள் வெளிநாட்டு பயணிகள் சுதந்திரமாக வீதிகளில் உலாவித்திரிவதையும் பணக்காரர்கள் நட்சத்திர விடுதிகளில் மகிழ்வுடன் இருப்பதையும் கண்டோம். இந்த பயணத்தடையில் அப்பாவி மக்கள் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள். எவ்வித முறையான நிவாரணங்களும் வழங்கப்படாமல் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளார்கள். இது முட்டாள்தனமாக உள்ளது. கொரோனாவிலிருந்து தப்பினாலும் பசியினால் தற்கொலை செய்யும் நிலையே இன்று உருவாகி வருகிறது.
அரசினால் வழங்கப்பட்ட 5000 ரூபாய் உதவித்தொகை தகுதியானவர்களில் 10 வீதமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 90 சதவீதமானவர்களின் நிலை என்ன? யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக நாங்கள் வீதிக்கு இறங்கி களப்பணி செய்கிறோம். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்ட நாங்கள் செய்ததை காட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05 மடங்கு செய்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை அரசுடன் இருக்கும் டக்ளஸ், அங்கஜன்,பிள்ளையான், வியாழேந்திரன் என யாராக இருந்தாலும் இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் தான் என்ன? இவர்கள் அமைச்சர்களாக இருந்து இராஜாங்க அமைச்சர்களாக இருந்து தமிழர்களுக்காக சாதித்தது என்ன? குறைந்தது மக்களின் பசியையாவது போக்கினார்களா?
சுகாதார துறை பற்றிய பூரண அறிவு எனக்கு இல்லாது போனாலும் பகுத்தறிவின் படி கொரோனா தொற்று உயிரிழப்பு அறிக்கைகளில் மிகைப்படுத்தல்கள் உள்ளதை உணர முடிகிறது. மட்டுமின்றி கொரோனா அறிக்கைகளிலும் குழப்பநிலை இருக்கிறது. பெறுமதியான தமது உயிர்களை காப்பாற்றி கொள்ள எல்லோரும் சுகாதார வழிமுறைகளை பேணி நடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.