அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் அதிபர் இன்று கடமையேற்பு.

(வி.சுகிர்தகுமார்) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய(கல்லூரி)பாடசாலையின் புதிய அதிபராக அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டு இன்று கடமையை பொறுப்பேற்றார்.

திருக்கோவில் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் அவர் கடமையினை சுபநேரத்தில் பொறுப்பேற்றதுடன் முன்னாள் அதிபர் சுமனிடம் இருந்து ஆவணங்களையும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர சேவையில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் கடந்த ஜனவரி மாதம் நடந்த நேர்முகப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அதிபராக தெரிவு செய்யப்பட்டதுடன் இவருக்கான நியமனத்தை அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கல்வி சேவை ஆணைக்குழு செயலாளரின் அனுமதியின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் இம்மாதம் 03ஆம் திகதி தொடக்கம் செயற்படும்; வகையிலாக வழங்கி வைத்தார்.

இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1  தரத்தை சேர்ந்த இவர் இதே பாடசாலையில் 1992ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் போட்டி பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவை-2 இற்கு தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் இதே பாடசாலையில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டு 2013 இல் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 இல் இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 இற்கு பதவி உயர்வு பெற்றார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாகவும் ,அரசறிவியலில் முதுகலைமாணி பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி பட்டத்தையும், தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவில் அதி சிறப்பு சித்தியும் பட்ட பின் கல்வி முகாமைத்துவத்தில் சிறப்பு சித்தியையும் பெற்ற இவர் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.