தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விடையத்தில் சிலர் தடையாக உள்ளனர். த கலையரசன்.

 

(சந்திரன் குமணன்) கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில் அரச காணிக்குள் மண் இட்டு நிரப்பி சலவை தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணா பகுதியினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் சில நபர்கள் ஈடுப்பட்டு வந்தனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலாளர்இ கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்தினைத் தடுத்து நிறுத்தியதோடு ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்

பெரிய நீலாவணை பிரதேசத்தில் அரச காணிக்குள் அத்துமீறி அதனைக் கையகப்படுத்தும் செயற்பாடுளை சகோதர இனத்தவர்கள் மேற்கொண்டதோடு அங்கு சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் தோணாவும் மண்ணிட்டு நிரப்பப்பட்டு அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து என்னால் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. அப்பிரதேச மக்களின் விரைவான செயற்பாட்டின் மூலம் இதனைத் தடுக்க முடிந்தது. ஆனால் இது போன்ற பல செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் அவ்வாறிருக்கையில் தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களின் பின்புலங்கள் பலமாக இருப்பதன் காரணமாகவே இவர்களால் இவ்வாறான காரியங்களைச் செய்ய முடிகின்றது. எமது நிலங்களை ஆக்கிரமிப்பதோடு மாத்திரமல்லாமல் எமது மக்களின் தொழிலிடங்களையும் வளைத்தப் போடும் இவ்வாறானவர்களின் இத்தகை செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறான செயற்பாடுகள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயார்த்தல் விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தமிழர் பிரதேச காணிகளை அபகரிப்பதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் தடையாக உள்ளார்களா? என்கின்ற சந்தேகங்களும் எழுகின்றன. இவ்வாறான நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இது தொடருமாயின் கட்டியெழுப்பப்பட வேண்டிய இரு இனங்களின் ஒற்றுமை சீர்குலையும் நிலைமையே உருவாகும் என இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

குறித்த இடத்தினை பார்வையிட்டு கொண்டிருக்கும் போதே முச்சக்கர வண்டியில் தென்னை ஓலைகளை ஏற்றி வந்து வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.