மன்னாரில் இன்றைய நிலையில் நாளொன்றுக்கு நான்கு பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்படுகின்றனர்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இம் மாதம் (யூன்) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையின்படி நாளொன்றுக்கு நான்கு பேர் என்ற விகிதாசாரத்தில் கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர். கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மத்தியிலேயே இவ் தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுவதால் மீனவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உண்டு என மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் வெள்ளிக் கிழமை (11.06.2021) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பனங்கட்டுகொட்டில் மற்றும் எமில் நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 412 பி.சீ.ஆர் பரிசோதனையில் 411 முடிவுகள் கடந்த வியாழக் கிழமையும்இ வெள்ளிக் கிழமையும் (10,11.06.2021) எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவற்றில் 20 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றபோதும் ஏனைய 19 பேர் பனங்கட்டுகொட்டு மற்றும் எமில் நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பிரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் 08 பேர் பனங்கட்டுகொட்டு மேற்கிலும்இ 08 பேர் எமில் நகரிலும்இ ஒருவர் பனங்கட்டுகொட்டு கிழக்கிலும் மற்றைய ஒருவர் சாவக்காடு பகுதியிலேயே இனம் காணப்பட்டுள்ளனர்.

இம்மாதம் (யூன் மாதம்) 1784 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மொத்தமாக 18 ஆயிரத்து 808 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாதம் (யூன்) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 46 கொவிட் தொற்றாளர்களை நோக்கும்போது மன்னாரில் இம் மாதம் நாளொன்றுக்கு நான்கு பேர் என்ற விகிதத்தில் இவ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

ஆகவே பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும். மாவட்டத்திற்கான சமூக தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றோம் எனவும் இவை வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அதிகமாக கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மீன் வாடிகளிலும் நெருக்கமாக இருந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினால் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் கடை பிடித்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என அவர் மீனவ சமூகத்துக்கும் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
.
(வாஸ் கூஞ்ஞ)