சேதனப் பசளைகளை உற்பத்தி! நகர சபை செயலாளர் றொனால்ட் லெம்பேட் அறிவிப்பு.

 

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் நகர சபையால் சேகரிக்கப்படும் குப்பைக் கூழங்களை பொது மக்கள் தரம் பிரிக்கப்பட்ட நிலையில் வழங்குவார்களாயின் விவசாயிகளுக்கு தேவையான சேதனப் பசளைகளை அதிகம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன் சபைக்கு அதிக வருமானத்தையும் ஈட்டி உள்ளுர் மக்களுக்கான அபிவிருத்திக்காக செலவழிக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படும் என மன்னார் நகர சபை செயலாளர் எக்ஸ்.றெனாலட் லெம்பேட் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கை அரசானாது இராசாயன பசளைகளை தவிர்த்து சேதனப் பசளைகளைக் கொண்டு விவசாய உற்பத்தியில் ஈடுபடும்படி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் சேதனப் பசளைகளை உற்பத்தி செய்யும் இடங்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் நேரடியாகச் சென்று இவர்களை ஊக்குவிப்பதுடன் இவர்கள் மூலம் விவசாய செய்கையில் ஈடுபடுவோருக்கு இவ் சேதன பசளைகளை விநியோகிப்பதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தவகையில் நீண்ட காலமாக மன்னார் நகர சபையினர் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைக் கூழங்களை கொண்டு சேதனப் பசளைகளை உற்பத்தி செய்து வருவதுடன் அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் நகர சபை செயலாளர் எக்ஸ்.றெனாலட் லெம்பேட் தெரிவிக்கையில் மன்னார் நகர சபையானது நாளாந்தம் 25 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டாலும் தாங்கள் நான்கு மெற்றிக் தொன் குப்பைகளையே இவ் சேதனப் பசளை உற்பத்திக்காக பயன்படுத்துகின்றோம்.

இதற்கு காரணம் வீடுகளிலிலோ அல்லது வர்த்தக நிலையங்களிலிருந்தோ இவ் குப்பைகளை வகை வகைகளாக பிரித்து தராமையால் இவ் கூட்டுப்பசளை தயாரிப்பதில் கஷ்டநிலையை எதிர்நோக்குகின்றோம்.

இருந்தும் நாங்கள் மாதாந்தம் எட்டாயிரம் தொடக்கம் பத்தாயிரம் கிலோ பசளைகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டு வருகின்றோம். இன்றைய சூழலில் இவ் சேதனப் பசளையை சந்தைப்படுத்தி தருவதற்கான ஏற்பாடுகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கமநல சேவைகள் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் எமக்கு ஏற்படுத்தி தருவதாக தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இவ் சேதனப் பசளையை சந்தைப்படுத்தும் திட்டம் வெற்றியளிக்குமாகில் தற்பொழுது உற்பத்தி செய்யும் தொகையைவிட இவற்றை இரண்டு அல்லது மூன்று மடங்காக உற்பத்தி செய்ய முடியும்.

இத்துடன் சேகரிக்கப்படும் பிளாஸ்ரிக் பொருட்களையும் மன்னார் நகர சபையானது இவற்றை அரைத்து அவற்றையும் விற்பனை செய்து வருகின்றது.

ஆகவே மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்கள் குப்பைகளை தரம் பிரித்து எமக்கு வழங்கும்போது சேதனப் பசளைகளை அதிகம் உற்பத்தி செய்து விவசாயிகள் மட்டுமல்ல எமது சபையின் வருமானத்தையும் அதிகரித்து இதன் மூலம் மக்களின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தையும் காணமுடியும் என இவ்வாறு தெரிவித்தார்.