பயணத்தடை உள்ள நிலையில் விபத்து

(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று 9ஆம் பிரிவை சேர்ந்த மீனவர் சங்க தலைவர்; எனவும் இவர் அனுமதி பெற்று மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டியுடன் பயணித்த அவர் வீதியை கடக்க முற்பட்டதாகவும் இச்சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடைபெற்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிசார் சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்;டதுடன் ஆராய்ந்தும் வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பயணத்தடை அமுலில் உள்ள நேரம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.