ஐந்தாயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கும் திட்டம்

(ஏறாவூர் நிருபர் – நாஸர்)கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா விசேடகொடுப்பனவு வழங்கும் திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள சுமார் பதினோரோயிரம் குடும்பங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கும் பணிகள் 02.06.2021 ஆரம்பிக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் பங்கேற்புடன் ஏறாவூர் மத்தி மற்றும் ஏறாவூர் கிழக்கு ஆகிய சமுர்த்தி வங்கிகளில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்களான எஸ்ஏஎம். பஸீர் மற்றும் திருமதி பிரதீப் குமார் ஆகியோர் நிகழ்வுகளுக்கு தலைமை வகித்தனர்.

இதன்போது சமுர்த்தி பயனாளிகள் இக்கொடுப்பனவினைப் பெற்றுக்கொண்டனர்.
சமுர்த்தி பெறத்தகுதியான குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவினைப்பெறுவோர், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும் இந்நிதி வழங்கப்படவுள்ளது.